மத்திய பிரதேசத்தில் சுயேச்சை வேட்பாளராக கிஷோர் சம்ரிதி போட்டியிடுகிறார்.
Bhopal: மத்திய பிரதேசத்தில் பாலகாட் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கிஷோர் சம்ரிதி தேர்தல் செலவுக்காக தனது கிட்னியை விற்று ரூ. 75 லட்சம் பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சுயேச்சையாக போட்டியிடும் கிஷோர் சம்ரிதி தேர்தல் ஆணையத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், ‘மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ரூ. 75 லட்சம் வரைக்கும் செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. என்னிடம் காசு இல்லை.
ஆனால் நான் தேர்தலில் நிற்கிறேன். எனது தேர்தல் செலவுக்காக தேர்தல் ஆணையம் ரூ. 75 லட்சத்தை தரலாம். இல்லாவிட்டால் ஏதாவது வங்கியில் எனக்கு கடன் பெற்றுத் தரலாம். அதுவும் முடியாவிட்டால் எனது ஒரு கிட்னியை விற்பனை செய்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க வேண்டும்.' என்று கூறியுள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு சம்ரிதி அளித்த பேட்டியில், ‘தேர்தல் பிரசாரம் முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள்தான் உள்ளன. என்னால் தேர்தல் செலவு தொகையை திரட்ட முடியவில்லை. எனவேதான் தேர்தல் ஆணையத்திடம் எனக்கு ரூ. 75 லட்சத்தை தருமாறு கேட்டுக் கொண்டேன்.' என்று தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 23, மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. முடிவுகள் மே 23-ல் வெளியாகின்றன.