மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
Dinhata: பொய் சொல்வதற்கு நான் ஒன்றும் மோடி அல்ல என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன. இங்கு ஏப்ரல் 11 முதல் மே 19 வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. மற்ற மாநிலங்களை விட இங்கு 4 முனை போட்டி காணப்படுகிறது.
ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்து களம் கண்டுள்ளன. ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசினாலும், அந்த எதிர்ப்பு வாக்குகள் சிதைய வாய்ப்பு உள்ளதால் மம்தா கட்சிக்கு வெற்றி பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று காலை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ''மேற்கு வங்க வளர்ச்சிக்கு ஸ்பீடு பிரேக்கராக இருப்பவர் மம்தா. மத்திய அரசின் சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத்தை மேற்கு வங்கத்தில் நிறைவேற்ற விடாமல் மம்தா தடுக்கிறார். ஏழைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்கள் 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை மாநிலத்தில் நிறைவேற்ற விடாமல் மம்தா இடையூறு செய்கிறார்'' என்று பேசினார்.
இந்த நிலையில் மோடிக்கு மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது-
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரம் விவசாயிக்ள தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் நலன் பெற மோடி என்ன செய்தார்?. எனது ஆட்சியின் கீழ் மேற்கு வங்கத்தில் விவசாயிகளின் வருமானம் மும்மடங்காக உயர்ந்திருக்கிறது.
பிரதமர் மோடி காலாவதியான நபர். அவர் முதலில் டெல்லியைப் பற்றி கவலைப்படட்டும். அதன்பின்னர் வங்கத்தை பார்க்கட்டும். எனது அரசைப் பற்றி தவறான தகவல்களை மோடி அளித்துக் கொண்டிருக்கிறார். நான் பொய் கூற மாட்டேன். பொய் சொல்வதற்கு நான் ஒன்றும் மோடி இல்லை.
இவ்வாறு மம்தா பேசினார்.