மாணவர்களுடன் கலந்துரையாடும் ராகுல் காந்தி
ஹைலைட்ஸ்
- புனேவில் மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாடினார்
- மாணவர்கள் கேட்டகேள்விக்கு ராகுல் பதில் அளித்தார்
- பிரியங்கா குறித்து பேசிய ராகுல், அவர் தனது நெருங்கிய நண்பர் என்றார்
Pune: உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்; தைரியம் பிறக்கும் என்று மாணவர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி புதுமை பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. குறிப்பாக கட்சி தலைவர் ராகுல் காந்தி கல்லூரி மாணவ மாணவிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.
கடந்த மாதம் சென்னை வந்த ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் புனேவில் கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஒருவர், 'உங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் நடிகையாக யார் நடிப்பார்?' என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, 'நான் எனது வேலையை திருமணம் முடித்துள்ளேன்' என்று கூறினார். இதற்கு பலத்த வரவேற்பு மாணவர்கள் மத்தியில் காணப்பட்டது.
முன்னதாக ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோதும், பத்திரிகையாளர்கள் இதே கேள்வியை கேட்டனர். அதற்கு 'காங்கிரஸ் கட்சியை திருமணம் முடித்துள்ளேன்' என்று ராகுல் பதில் அளித்திருந்தார்.
வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதன்பின்னர் அவரது தங்கை பிரியங்கா காந்தி, ராகுல் குறித்து ட்விட் செய்தார்.
பிரியங்கா தனது ட்விட்டர் பதிவில், 'எனது சகோதரர், உண்மை நண்பர், மிகவும் தைரியமான நபர் ராகுல். அவரை வயநாடு மக்களே, பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ராகுல் உங்களை கைவிட மாட்டார்' என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக மாணவர் ஒருவர் எழுந்து நின்று, 'தைரியத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, 'அனுபவத்தில் இருந்துதான் தைரியம் வரும். நான் எனக்கு எது நேர்ந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வேன். நீங்கள் உண்மையை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு தைரியம் பிறக்கும். பொய்யை ஏற்றுக் கொண்டால் நீங்கள் பயம் கொள்வீர்கள்' என்று பதில் அளித்தார்.
பிரியங்கா பற்றி பேசிய ராகுல், 'எனது தங்கை என்னுடைய நெருங்கிய நண்பர்' என்று கூறினார். கேரளாவை பாராட்டிய ராகுல் காந்தி, அம்மாநில உணவுகள் சற்று காரணமாக இருந்தாலும் அவை தனக்கு பிடிக்கும் என்று பதில் அளித்தார்.