ஆந்திராவில் தேசியக் கட்சிகள் எதையும் செய்யவில்லை என்று ஜெகன் மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்கிறார் ஜெகன் மோகன்
- ஆந்திராவில் தேசிய கட்சிகள் நம்பிக்கை இழந்து விட்டன : ஜெகன்
- சிறப்பு அந்தஸ்தை வலியுறுத்துகிறார் ஜெகன் மோகன் ரெட்டி
Vijayawada: பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால்தான் தேசிய கட்சிகள் ஜனநாயகத்தை கிண்டல் செய்யாமல் இருக்கும் என்றும் ஜெகன் மோகன் தெரிவித்திருக்கிறார்.
ஆந்திராவில் முக்கிய கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் பாருங்கள். நிச்சயமாக எந்தக் கட்சிக்கு மெஜாரிட்டிக்கு கிடைக்காது. அப்போதுதான் தேசிய கட்சிகள் ஜனநாயகத்தை கிண்டல் செய்யாமல் இருப்பார்கள்.
ஆந்திராவை பொறுத்தளவில் தேசிய கட்சிகளுக்கு எந்த வேலையும் கிடையாது. இங்கு அவை மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டன. ஏனென்றால் சிறப்பு அந்தஸ்தை பெற்றுத் தருவதில் காங்கிரசும், பாஜகவும் இரட்டை வேடம் போடுகின்றன.
மக்களின் விருப்பத்திற்கு எதிராக தேசிய கட்சிகள் ஆந்திராவை பிரித்தன. அவைகளை ஆதரிப்பதற்கு முன்பாக ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும். அதை விட எங்களுக்கு எதுவும் பெரியது கிடையாது.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்குபவர்களுக்கு மட்டுமே நாங்கள் ஆதரவு அளிப்போம். எங்களிடமும், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவிடம் மும் சேர்த்து மொத்தம் 42 எம்.பி.க்கள் உள்ளனர். எங்கள் விருப்பத்திற்கு மாறாக மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் ஒற்றுமையாக செயலாற்றுவோம்
இவ்வாறு ஜெகன்மோகன் கூறினார்.