New Delhi: மக்களவை தேர்தல் 2019: மற்ற கட்சிகளை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. அதில், வேலைவாய்ப்பு, பெண்களுக்கு சமவேலைவாய்ப்பு, ஆண்களுக்கு இணையான சம்பளம், விவசாயிகளுக்கு 100 சதவீத லாபம் வழங்க வழி வகுக்கப்படும் உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறது.
தமிழக நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகின்றது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில், நேற்று கோவை கொடிசியா மைதானத்தில், மக்கள் நீதி மய்யத்தினர் நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.
மக்களவை தேர்தலில் கமல்ஹாசனும் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். கவிஞர் சினேகன் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.
மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக, 5 வருட ஆட்சி காலத்திற்குள் 50 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஓதுக்கீடு, விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகளுக்கு மேல் 100% லாபம் கிடைக்க திட்டங்கள், ரேஷன் பொருட்கள் வீட்டில் வழங்கப்படும், டோல் கட்டணம் முற்றிலும் ஒழிக்கப்படும், கல்வி மாநிலப் பட்டியலில் மீண்டும் கொண்டுவரப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், சவுக்கிதார் எனத் தன்னை சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஏழைகளின் காவலர் அல்ல. பணக்காரர்களின் காவலர் என பிரதமர் மோடியை அவர் கடுமையாக விமர்சித்தார்.
அரசியலில் பல்லக்கில் ஏறிச் செல்வதை விட, அந்தப் பல்லக்கைத் தோள் கொடுத்து தூக்கிச் செல்லவே விரும்புகிறேன். உங்களுக்கு தெரியாத முகங்களை தெரிந்த முகங்கள் ஆக்குவதே என் கடமை என்று அவர் கூறினார்.