This Article is From Feb 25, 2019

‘’40 அல்ல; 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்’’ – அனல் பறந்த கமல் பேச்சு

மக்கள் நீதி மய்யத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி நெல்லையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கமல் உள்ளூர் முதல் தேசிய அரசியல் வரை பேசினார்.

‘’40 அல்ல; 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்’’ – அனல் பறந்த கமல் பேச்சு

நெல்லை மாநாட்டில் பேசும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்

ஹைலைட்ஸ்

  • மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது
  • பொது வாழ்வில் வெற்றி பெற கமலுக்கு வாழ்த்து கூறியுள்ளார் ரஜினி.
  • பாஜக ஆதரவு கட்சி மக்கள் நீதி மய்யம் அல்ல என்கிறார் கமல்
Chennai:

பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சேரும் கூட்டணி வலுவாக இல்லை என்றும், தமிழ்நாட்டில் 40 அல்ல 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

ட்விட்டரில் அரசியல் கருத்துகளை பதிவிட்டும், பொதுப் பிரச்னைகளில் மக்களை சந்தித்தும் வந்த நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அதுதொடர்பான நிகழ்ச்சிகளில் கமல் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் நெல்லையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்ய பொதுக் கூட்டத்தில் கமல் பேசியதாவது-

நாங்கள் ஒன்றும் பாஜகவின் பி டீம் (ஆதரவு கட்சி) அல்ல. மக்கள் நீதி மய்யம் என்பது தமிழ்நாட்டின் ஏ டீம் (முன்னணி கட்சி). இங்கு 40 (மக்களவை )தொகுதிகள் மட்டுமல்ல; தேர்தல் நடக்கவிருக்கும் 60 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

மோடிக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன. எனக்கொன்றும் அவர்கள் வலுவாக இருப்பதுபோன்று தெரியவில்லை. விரைவில் அந்த கட்சிகள் சிதறிச் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டிய கமல், தமிழ்நாட்டில் கேள்வி கேட்பவர்கள் வாயிலேயே சுடப்படுகிறார்கள் என்றார்.

தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்களவை  தொகுதிகள் 39 உள்ளன. இந்த இரண்டையும் குறிப்பிட்டு கமல்ஹாசன் 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

அரசியலுக்கு வந்துள்ள கமல், பொது வாழ்விலும் வெற்றி பெற வாழ்த்துவதாக ரஜினிகாந்த் நேற்று ட்விட் செய்திருக்கிறார். மொத்தத்தில் தமிழக அரசியல் களம் சூடாகியுள்ளது.

.