ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க தலைவராக கன்னையா குமார் இருந்தார்.
Patna: பீகாரில் இடதுசாரிகள் சார்பாக கன்னையா குமார் பெகுசராய் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் அவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவ சங்க முன்னாள் தலைவராக இருந்தார்.
மத்திய அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால், எதிர்க்கட்சிகள் அவரை ஆதரித்தன. இந்த நிலையில் பீகாரில் அவர் போட்டியிட எதிர்க்கட்சிகள் வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இடதுசாரிகளுக்கு பீகார் எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் கொடுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த கன்னையா குமார் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக பெகுசராய் தொகுதியில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
பெகுசராய் தொகுதியை பொறுத்தளவில் இடது சாரி கட்சிகளுக்கு கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. இருப்பினும் இங்கு முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படும்.
இந்த தொகுதியில் தன்விர் ஹசன் என்பவரை வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது. அவர் கடந்த 2014 மக்களவை தேர்தலில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வி அடைந்தார். ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முனாசிர் ஹசன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
தற்போது கன்னையா குமார் நின்றால் அது வாக்குகள் பிரிக்கப்பட்டு, ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி வெற்றி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு 7 கட்டங்களாக ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முடிவுகள் மே 23-ம்தேதி அறிவிக்கப்படவுள்ளன.