தென்னிந்திய மக்களுடன் தான் இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார்.
Wayanad: கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை எளிதாக வெற்றிபெற விடமாட்டோம் என்று இடதுசாரி கூட்டணி சவால் விடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழக்கமாக உத்தர பிரதேச மாநிலம் அமேதியில்தான் போட்டியிடுவார். ஆனால் இந்த தேர்தலில் கேரள மாநில வயநாடு தொகுதி என 2 தொகுதிகளில் ராகுல் களம் காணுகிறார்.
இதற்கு தென்னிந்திய மக்களுடன் தான் இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுத்ததாகவும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தென்னிந்தியாவும் முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என்பதற்காகவும் வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல் கூறியிருந்தார்.
இதனை விமர்சித்த பாஜக, பெரும்பான்மை இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இந்து தீவிரவாதம் என்று ராகுல் காந்தி பேசியதால், அமேதி மக்கள் அவரை தோற்கடித்து விடுவார்கள். இதனால் சிறுபான்மையினர் வாக்கு பெரும்பான்மையாக இருக்கும் வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதாக கூறியுள்ளது.
இதற்கிடையே, பாஜகவை எதிர்க்கும் இடதுசாரிகள் பலத்துடன் காணப்படும் வயநாட்டில், ராகுல் காந்தி போட்டியிடுவது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் முடிவு குறித்து இடது சாரி கூட்டணியின் முக்கிய தலைவர் விஜயன் செருக்கரா கூறியதாவது-
ராகுல் காந்தி ஏதோ கண்ணுக்கு தெரியும் கடவுளைப் போல சித்தரிக்கப்படுகிறார். அவருக்கு குடும்ப தொகுதியான அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது எளிதாக இருக்கலாம். ஆனால் கேரள மண் வித்தியாசமானது. அவருக்கு தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பதை காண்பிப்போம்.
ராகுலின் அறிவிப்பை தொடர்ந்து எங்களது கட்சி தொண்டர்கள் இன்னும் உற்சாகமாக உள்ளனர். இன்னும் அதிக சக்தியுடன் இந்த சவாலை தொண்டர்கள் ஏற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.