This Article is From Mar 07, 2019

மார்ச் 11-ல் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

தொகுதிப் பங்கீட்டை திமுக இறுதி செய்துள்ள நிலையில், எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு திமுக தலைமை ஏற்பாடு செய்துள்ளது.

மார்ச் 11-ல் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

மக்களவை தேர்தல் வெற்றி வியூகம் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai:

மார்ச் 11-ல் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை திமுக நடத்தவுள்ளது. இதில் மக்களவை தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேபோன்று 21 சட்டசபை தொகுதிகளில் இடைதேர்தல் குறித்தும் இந்தக் கூட்டததில் விவாதிக்கப்படும். இந்த கூட்டம் தொடர்பான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். 

கூட்டத்தில் திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர். தமிழகம் மற்றும் புதுவையில் திமுக 8 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் மதிமுகவுக்கு ஒரு இடத்தை திமுக ஒதுக்கியுள்ளது. 

கடந்த 2017-ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகத்தில் இறங்கிய 18 எம்எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

இதேபோன்று திருவாரூர் தொகுதி கருணாநிதி மறைவாலும், திருப்பரங்குன்றம் தொகுதி ஏ.கே. போஸ் மறைவாலும் காலியாக உள்ளன. கடைசியாக ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு கலவர வழக்கில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓசூர் தொகுதி காலியாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. 
 

.