கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
Tiruchirappalli: மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 விவசாயிகள் போட்டியிடுவார்கள் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதற்கிடையே, வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
அவரை எதிர்த்து போட்டியிடுவோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாய போராட்டத்தை ஒருங்கிணைத்த தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு அளித்த பேட்டியில் கூறியதாவது-
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் வாரணாசியில் போட்டியிடுவோம். திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளன.
நாங்கள் மோடிக்கோ, பாஜகவுக்கோ எதிரானவர்கள் அல்ல. அவர் விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார். ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏன் நிறைவேற்ற மறுக்கிறார் என்பது தெரியவில்லை.
குறைந்தபட்சம் பாஜகவின் தமிழக எம்.பி.யான பொன் ராதாகிருஷ்ணன் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பேன் என தேர்தல் வாக்குறுதி அளித்தால் நாங்கள் எங்களது முடிவை மறு பரிசீலனை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.