தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Chennai: திமுகவுடன் ஒன்று சேர்ந்து தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டு, புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துவிட்டு வந்த கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் காங்கிரஸ் கட்சியின் எளிய தொண்டனாக வாழ்ந்து வருகிறேன். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்து கவுரவித்துள்ளார். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது உடனடி கடமை என்பது தமிழகம், புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என முன்னிறுத்தினார். அவருக்கு நன்றிக்கடன் செலுத்த கடமைபட்டுள்ளோம். தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற முன்னாள் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். சிறந்த வளர்ந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும். ஏழை-எளியோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.
தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது இயற்கையான கூட்டணியாகும். எனவே நாங்கள் திமுகவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். திமுகவுடன் ஒன்று சேர்ந்து தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறியுள்ளார்.