மக்களவை தேர்தலில் டெல்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள்
ஹைலைட்ஸ்
- மக்களவை தேர்தல்: டெல்லியில் வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி
- 7-வது தொகுதிக்கு விரைவில் வேட்பாளர் அறிவிப்பு
- கடந்த 2014 தேர்தலில் பாஜக 7 இடங்களில் வென்றிருந்தது
New Delhi: மக்களவை தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுகிறது. இதன்படி டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளரை ஆம் ஆத்மி கட்சி இன்று அறிவித்துள்ளது.
மே மாதம் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டணி அமைக்கும் என்று கருதப்பட்டது. இதில், உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டணி அமைத்துக் கொண்டதால், பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒருங்கிணைவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கு அடுத்தபடியாக தற்போது ஆம் ஆத்மி கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதன்படி டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்னும் ஒரு தொகுதியில் எந்த வேட்பாளர் போட்டியிடப் போகிறார் என்பது இதுவரை முடிவாகவில்லை.
கிழக்கு டெல்லிக்கு ஆதிஷியும், தெற்கு டெல்லிக்கு ராகவ் சாத்தாவும், சாந்தினி சவுக்கிற்கு பங்கஜ் குப்தாவும், வடகிழக்கு டெல்லிக்கு திலிப் பாண்டேவும், வடமேற்கு டெல்லிக்கு குகன் சிங்கும், புதுடெல்லிக்கு பிரஜேஷ் கோயலும் ஆம் ஆத்மி தரப்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு டெல்லிக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் விரைவில் முடிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது பாஜக மொத்தம் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதற்கு அடுத்தபடியாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 77 தொகுதிகளில் 66-ல் வெற்றி பெற்றது.