மக்களவைக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் மக்கள் காலை 6.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
அனைத்து இடங்களிலும் மக்கள் வாக்களிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 39.49% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.
ஒரு சில இடங்களில், நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள் பொறுமை இழந்து வேறு வழியில்லாமல் மீண்டும் வீட்டிற்கு திரும்பி செல்லும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது. தொடர்ந்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாரை சீர் செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தாலும், பெரும்பான்மையான இடங்களில் அது உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என வாக்காளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் பண்ருட்டி அடுத்த திருவதிகையில் உள்ள வாக்குச்சாவடியில் பரிசுப்பெட்டி சின்னத்திற்கு வாக்களிப்பதற்கான பட்டன் இல்லை என புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, பரிசுப்பெட்டிக்கான சின்னத்திற்கான பட்டன் இல்லாததால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.