Lok Sabha Elections 2019: மக்களவைக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் மக்கள் காலை 6.30 மணிக்கே வாக்களிக்க மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், அஜீத், விஜய் உட்பட நடிகர், நடிகைகளும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று காலை தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்றார். வாக்குப் பதிவு எந்திரம் பழுதானதால் அவர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார்.
இதேபோல், பல தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.