This Article is From Apr 26, 2019

வேட்பு மனுவில் சொத்து விவரத்தை வெளியிட்ட பிரதமர் மோடி! எத்தனை கோடிகளுக்கு அதிபதி தெரியுமா?!

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்திருக்கும் வேட்பு மனுவில் மோடி சொத்து விவரத்தை குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனுவில் சொத்து விவரத்தை வெளியிட்ட பிரதமர் மோடி! எத்தனை கோடிகளுக்கு அதிபதி தெரியுமா?!

ராகுல் காந்தியின் சொத்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 9.4 கோடியிலிருந்து ரூ. 15.38 கோடியாக உயர்ந்துள்ளது.

New Delhi:

பிரதமர் மோடியின் மொத்த சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 52 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கையில் ரொக்கப் பணமாக ரூ. 38,750-யை அவர் வைத்திருக்கிறார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், வேட்பு மனுத்தாக்கலின் போது சொத்து விவரத்தை மனுவில் குறிப்பிட வேண்டும். அந்த வகையில் அனைத்து வேட்பாளர்களும் சொத்து விவரத்தை அளித்துள்ளனர்.

கடந்த 5-ம்தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனக்கு ரூ. 15.98 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவரது சொத்து 5 ஆண்டுகளில் ரூ. 9.40 கோடியில் இருந்து ரூ. 15.98 கோடியாக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடி, தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அதில் தனது சொத்து விவரத்தை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் விவரம்-

கடந்த 2014 மக்களவை தேர்தல் வேட்பு மனுத்தாக்கலின்போது தனக்கு ரூ. 1.65 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக மோடி தெரிவித்தார். தற்போது அவரது மொத்த சொத்து ரூ. 2.51 கோடி. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து 52 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

2014-ல் மோடியின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 51 லட்சம். அது தற்போது 3 மடங்கு உயர்ந்து ரூ. 1.41 கோடியாக உள்ளது. தன்னிடம் அசையா சொத்து ரூ. 1.10 கோடி அளவுக்கு உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 31-ம்தேதி நிலவரப்படி மோடியிடம் ரூ. 38 ஆயிரத்து 750 ரொக்கப் பணம் உள்ளது. குஜராத்தின் காந்தி நகர் ஸ்டேட் வங்கி கணக்கில் ரூ. 4,143 பணம் மோடி பெயரில் உள்ளது. காந்தி நகரில் கடந்த 2002-ல் ரூ. 1.30 லட்சம் மதிப்பில் ஒரு சொத்தை தனது பெயரில் மோடி வாங்கினார். அதன் தற்போதைய மதிப்பு ரூ. 1.10 கோடி.

தன்மீது எந்தவொரு கிரிமினல் வழக்கும் இல்லை என்று வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்ட மோடி, குஜராத் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

.