மகராஷ்டிரா பிரசாரத்தில் தேர்தல் விதிகளை பிரதமர் மோடி மீறவில்லை என ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- பிரதமர் மோடிக்கு எதிரான புகார்களை முதல்முறையாக தேர்தல் ஆணையம் ஏற்றது.
- மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்
- வெறுப்புணர்வையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் விதமாக பேசியதாக புகார்.
New Delhi: மகாராஷ்டிரா மாநிலம், வர்தா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது குறித்து விமர்சித்த மோடி, அதில் இந்துக்களை அவமதிப்பதுபோல் பேசியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில், தேர்தல் விதிகளை பிரதமர் மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்ட நிலையிலும், மோடிக்கு எதிரான புகாரை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது இதுவே முதல்முறையாகும். கடந்த ஏப்ரல் 1ம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, 'காங்கிரஸ் கட்சி தலைவர் இந்துக்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட பயந்து, இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதியில் போட்டியிடுகின்றனர்' என கூறினார்.
இதனையடுத்து பிரதமர் மோடி பேசியது மத வெறுப்புணர்வையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது என காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதைத்தொடரந்து, இந்த புகாரை ஏற்ற தேர்தல் ஆணையம் மகராஷ்டிராவில் பிரதமர் பேசியதில் வன்முறையை தூண்டும் விதமாக எதுவும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிரான புகார்கள் மீதான நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியது.
இந்த நோட்டீசுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வத்ரா பகுதியில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி பேசியது தேர்தல் விதிககளை மீறியது அல்ல என கூறியுள்ளது.
தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழக்கை மே.2ம் தேதி ஒத்தி வைத்தது.