காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்புள்ளது.
New Delhi: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென் மாநிலங்களில் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக காங்கிரஸ மாநில தலைவர்கள் பலர் ராகுலை வலியுறுத்தி இருந்தனர். அவர் இங்கு போட்டியிட்டால் காங்கிரசாருக்கு கூடுதல் உற்சாகம் ஏற்படும் என்பது கட்சியின் மாநில தலைவர்களின் எண்ணமாக உள்ளது.
இந்த யோசனையை ராகுல் காந்தி கவனத்தில் கொண்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே அவர் கன்னியாகுமரியில் போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர். ராகுலும் தென்னிந்தியாவில் தனது முதல் பொதுக்கூட்டத்தை கன்னியாகுமரியில் நடத்தினார்.
ஆனால் கன்னியாகுமரி வேட்பாளராக வசந்த குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் வலுவாக இருக்கும் கேரளாவில் ராகுல் போட்டியிட வேண்டும் என்று அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக வயநாடு தொகுதியில் ராகுல் களம் இறங்க வேண்டும் என்பது கேரள காங்கிரசாரின் விருப்பமாக இருக்கிறது.
இதனை ராகுல் காந்தி கவனத்தில் கொண்டிருப்பதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார். இதற்கிடையே வயநாடு தொகுதியில் கோழிக்கோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்தீக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ராகுல் ஓகே சொன்னால், வயநாட்டில் வேட்பாளர் மாற்றப்பட்டு விடும்.
மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். வயநாட்டை அவர் போட்டியிடும் 2-வது தொகுதியாக எடுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014 தேர்தலில் மோடி உத்தரபிரதேசம் வாரணாசி மற்றும் குஜராத்தில் வடோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மோடி, பின்னர் வடோதரா எம்.பி. பொறுப்பை ராஜினாமா செய்தார்.