பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியில் சேர்ந்தார்.
ஹைலைட்ஸ்
- கடந்த மக்களவை தேர்தலில் மோடியின் பிரசார ஆலோசகராக இருந்தவர் பிரசாந்த்
- இந்த தேர்தலில் தான் கற்றுக் கொள்ள போவதாக கிஷோர் ட்விட்
- ஆந்திராவில் ஜெகன் மோகனுக்கு பிரசாந்த் ஐடியா அளித்தாக கூறப்படுகிறது
Patna: பீகார் அரசியலில் திடீர் திருப்பமாக பிரசார வல்லுனரும், ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவருமான பிரஷாந்த் கிஷோரை முதல்வரும், கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் ஓரங்கட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது அதிருப்தியை பிரஷாந்த் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில், 'பீகார் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு போராடும். ஐக்கிய ஜனதா தளத்தை பொறுத்தவரையில் தேர்தல் நிர்வாகம், பிரசாரம் உள்ளிட்டவற்றை மூத்த அரசியல் தலைவர் ஆர்.சி.பி. சிங் பார்த்துக் கொள்வார். எனது அரசியலின் ஆரம்ப கட்டமான இந்த சூழலில், இந்த தேர்தலில் நான் கற்றுக் கொள்ளவும், ஒத்துழைப்பு செய்யவும் போகிறேன்' என்று கூறியுள்ளார்.
தொழில் முறையில் பிரசாந்த் கிஷோர் ஒரு பிரசார யுக்தி வல்லுனர். கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியை முன்னிறுத்தி பாஜக வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது. இந்த தேர்தலில் மோடியின் பிரசார வல்லுனராக பிரசாந்த் கிஷோர்தான் செயல்பட்டார்.
அவர் கடந்த ஆண்டு ஐக்கிய ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு துணை தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் கட்சியின் எதிர்காலமாக பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று கூறினார்.
ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் நிதிஷ் குமார் அளித்த பேட்டி ஒன்றில், அரசியலில் அனுபவம் இல்லாமல் இருந்துக்கும் நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா பரிந்துரை செய்ததால்தான் பிரசாந்த்தை கட்சியில் சேர்த்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரசார ஆலோசகராக இந்த தேர்தலில் பிரசாந்த் பணியாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரை சொந்த கட்சியே பிரசார ஆலோசனைக்கு பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.