This Article is From Apr 05, 2019

''5 ஆண்டுகளில் மோடி என்ன செய்தார்?'' : பிரியங்கா காந்தி கேள்வி!!

தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தியின் குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இதற்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Ghaziabad:

ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி என்ன செய்தார் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 
உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் வருகின்றன. 

இந்த நிலையில் காஜியாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது-
தேர்தலில் வாக்கு அளிப்பதற்கு முன்பாக நன்றாக யோசித்துப் பார்த்து வாக்களியுங்கள். ஆட்சியில் இருப்பவர்களை மக்கள்தான் அமர வைத்தனர் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். 

கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்பதை பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். 15 நாட்களுக்கு முன்பாக நான் வாரணாசிக்கு சென்றிருந்தேன். அது மோடியின் சொந்த தொகுதி. 

அங்கு அவர் ஏதாவது செய்திருப்பார் என்று பார்த்தேன். ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் அவர் ஏழை குடும்பத்தினரை ஒரு 5 நிமிடம் கூட சந்தித்து பேசவில்லை. அவர் ஜப்பான் செல்கிறார், அமெரிக்கா செல்கிறார்.

பாகிஸ்தானுக்கு சென்று பிரியாணி சாப்பிடுகிறார். ஆனால் சொந்த தொகுதியில் உள்ள ஏழை குடும்பத்தினரை சந்திக்க மோடிக்கு நேரம் இல்லை. தன்னை தேசியவாதி என்று மோடி அழைத்துக் கொள்கிறார். அப்படியென்றால் அவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைவரையும் மதிக்க வேண்டும். 

இவ்வாறு பிரியங்கா பேசினார். 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் மே 19-ல் முடிகிறது. முடிவுகள் 23-ம்தேதி அறிவிக்கப்படுகின்றன. 

.