This Article is From May 02, 2019

''உ.பி.யில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் காங்கிரசின் வியூகம்'' - ராகுல் காந்தி!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி NDTV- க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு ராகுல் பதில் அளித்திருக்கிறார்.

உத்தர பிரதேச அரசியல் குறித்து விரிவாக பேசியுள்ளார் ராகுல்

ஹைலைட்ஸ்

  • உ.பி.யில் மும்முனை போட்டி நடைபெறுகிறது
  • பிரதமரை தீர்மானிக்கும் முக்கிய மாநிலமாக உ.பி. உள்ளது
  • உ.பி.யில் 41 தொகுதிகளுக்கு பிரியங்கா காங். தேர்தல் பொறுப்பாளர்
New Delhi:

உத்தர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் காங்கிரசின் தேர்தல் வியூகம் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி NDTV- க்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு ராகுல் பதில் அளித்திருக்கிறார். 

NDTV -க்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது- 

உத்தர பிரதேசத்தை பொறுத்தளவில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற மத நல்லிணக்க கட்சிகள்தான் வெற்றி பெறும். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்களது தேர்தல் வியூகம். இதனை வெளிப்படையாக கூறும்படி பிரியங்காவுக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் நான் கூறினேன். 

காங்கிரசுடன் கூட்டணி அமைக்காதது குறித்து மாயாவதியிடமும், அகிலேஷ் யாதவிடமும்தான் கேட்க வேண்டும். உத்தர பிரதேச தேர்தல் களத்தை பொறுத்தளவில் சமாஜ்வாதிக்கும், பகுஜன் சமாஜுக்கும் காங்கிரஸ்தான் எதிரியாக பார்க்கப்படுகிறது. 

என்னைப் பொறுத்தளவில் அகிலேஷ், மாயாவதி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். மதசார்பற்ற சக்திகள் இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் என நம்புகிறேன். 

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார். முன்னதாக உத்தர பிரதேச  கள நிலவரம் குறித்து பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், பலவீனமான காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜக வாக்குகளை பறித்து விடுவார்கள் என்று கூறியிருந்தார். இது மறைமுகமாக பாஜகவுக்கு உதவத்தான் செய்யும் என விமர்சனம் எழுந்தபோது, பாஜகவுக்கு உதவி  செய்வதற்கு பதிலாக உயிரை விடலாம் என்று பிரியங்கா தெரிவித்தார். 

இருப்பினும் காங்கிரசை அகிலேஷும், மாயாவதியும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 'பலவீனமான வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தியதாக தெரியவில்லை. அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை. இதனை சமாளிப்பதற்காக பலவீனமான வேட்பாளரை நிறுத்தினோம் என பிரியங்கா கூறுகிறார்' என்று அகிலேஷ் விமர்சித்துள்ளார்.

மாயாவதியோ,'பாஜகவும், காங்கிரசும் ஒன்றுதான். இருவருக்கும் ஆதரவளித்து உங்கள் வாக்கை வீணடிக்காதீர்கள். ராகுல் இன்னும் முதிர்ச்சி பெறவில்லையா?. எதற்காக அவர் மோடியை கட்டிப்பிடித்தார்?' என்று கூறியுள்ளார். 

.