ஓட்டுக்கு பணம் வழங்கியது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் வேலூரை தவிர்த்து மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தமிழகத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தபோது கோடிக்கணக்கில் பறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றினர்.
வாக்காளர்களுக்கு அளிக்க பணம் வைக்கப்பட்டிருந்ததாக கூறி வேலூரில் பணம் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் வேலூரில் மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி அதுபற்றி விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது. இதனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று ரத்து செய்து விட்டது.
மாநிலத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டதால், அதுகுறித்து மீண்டும் விசாரிப்பது என்பது சரியானதாக இருக்காது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். வழக்கை தொடர்ந்த மனுதாரர் தனது மனுவில் தமிழ்நாட்டில் ரூ. 78.12 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்று டிவி, செய்தித்தாள்கள், ரேடியோ உள்ளிட்டவைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.