ராகுல் காந்தியை பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா சந்தித்து பேசியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- ராகுல் காந்தியை சத்ருகன் சின்ஹா சந்தித்து பேசியுள்ளார்
- ராகுல் காந்தி உற்சாகப்படுத்தும்படி பேசியதாக சத்ருகன் சின்ஹா தெரிவித்தார்
- நேரு குடும்பத்தினர் நாட்டை கட்டமைத்தவர்கள் என்கிறார் சின்ஹா
New Delhi: பாஜகவை விட்டு இன்னும் விலகாத நிலையில் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். அவர் காங்கிரசில் சேரும் முடிவை எடுத்திருக்கிறார்.
பாஜகவில் எம்.பி.யாகவும், பல்வேறு பொறுப்புகளிலும் சத்ருகன் சின்ஹா இருந்திருக்கிறார். பல பிரச்னைகளின்போது கட்சிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து சின்ஹா சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.
இந்த நிலையில் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்து பேசினார். இதுகுறித்து என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில்,''ராகுல் உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. உற்சாகம் அளிக்கும் வகையில் அவர் என்னிடம் பேசினார். பாஜகவின் கண்ணியத்தை காப்பாற்றியும், அதேநேரம் எனது கருத்துக்களை பல விஷயங்களில் தெளிவாக கூறியிருந்தேன். இதனை ராகுல் பாராட்டினார்.
அவர் என்னை விட வயதில் இளையவர். இன்று அவர் நாட்டின் மிகவும் பிரபலமான தலைவராக இருக்கிறார். நான் நேரு - காந்தி குடும்பத்தின் ஆதரவாளர். அவர்கள் நாட்டை கட்டமைத்தவர்கள் என்று நான் நம்புகிறேன். '' என்று தெரிவித்தார்.
இதற்கிடையே சத்ருகன் சின்ஹா ஏப்ரல் 6-ம்தேதி காங்கிரஸ் கட்சியில் சேர்வார் என்று மூத்த தலைவர் ஷக்தி சிங் கோஹில் ட்விட்டரில் கூறியுள்ளார். பாஜக தலைவர் அமித் ஷாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து கடந்த காலங்களில் சத்ருகன் சின்ஹா பலமுறை ட்விட் செய்திருக்கிறார்.
கடந்த ஜனவரியில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாநாடு நடத்தினார். இதில் சத்ருகன் சின்ஹா கலந்து கொண்டார். ராகுலின் வறுமை ஒழிப்பு திட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த சத்ருகன் சின்ஹா, மிக மிக சாதுர்யமான நடவடிக்கை என பொருள்படும் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று ராகுலை பாராட்டியுள்ளார்.