ஏப்.4ஆம் தேதிக்குள் ஹர்திக் படேலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தவில்லை என்றால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஹைலைட்ஸ்
- அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
- தண்டனையை நிறுத்தி வைக்கும்படி உச்சநீதிமன்றத்தில் ஹர்திக் மனு
- 2015ல் கலவரத்தில் ஈடுபட்டதாக ஹர்திக் படேலுக்கு சிறை தண்டனை விதிப்பு
New Delhi: தனக்கு வழக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய ஹர்திக் படேலின் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், 2015ல் தண்டனை வழங்கப்பட்ட வழக்கை இப்போது விசாரிக்க என்ன அவரசம் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
ஏப்.4ஆம் தேதிக்குள் ஹர்திக் படேலுக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்கவில்லை என்றால், அவர் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது. எனெனில், ஹர்திக் போட்டியிட விரும்பும் குஜராத் தொகுதியில் ஏப்.23ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கலுக்கு ஏப்.4ஆம் தேதியே கடைசி நாளாகும்.
ஹர்திக் படேலுக்ககு தற்போது 25வயதாகிறது. இதனால், அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம். ஆனால், தேர்தலில் போட்டியிட அவர் மீதான வழக்கு சிக்கலை ஏற்படுத்தியது. மாவட்ட நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஹர்திக் படேல் வழக்கு தொடர்ந்தார்.
அவரது கோரிக்கையை அனுமதிக்க கூடாது என குஜராத் அரசின் சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. ஹர்திக் படேலின் கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் மார்ச் 29ம் தேதி நிராகரித்தது. நீதிமன்றத்தில் ஹர்திக் படேலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
முன்னதாக, படேல் சமூகத்தினற்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2015ம் ஆண்டில் ஹர்திக் படேல் போராட்டம் நடத்தினார். போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை காரணமாக ஹர்திக் படேல் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு விஸ்நகர் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 4 கடைசி நாள் என்பதால், மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று ஹர்திக் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தினார். ஆனால், என்ன அவசரம் என்று கூறி மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.