திமுக 20 முதல் 25 இடங்களில் போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
New Delhi: மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக – பாமக – பாஜக கூட்டணி நேற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. அந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடன் பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவுக்கு ஒதுக்கியதுபோக மீதம் 28 தொகுதிகள் இருக்கின்றன.
இவற்றை பங்கீடு செய்வதில் கருத்தொற்றுமை எட்டப்படவில்லை. இந்த பரபரப்பான சூழலில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை திமுக – காங்கிரஸ் இன்று வெளியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு 9 இடங்கள்வரை ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கடந்த நேற்று முன்தினமும், நேற்றும் சந்தித்து பேசினார்.
திமுக 20-25 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனிமொழியுடனான சந்திப்புக்கு பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், ராமசாமி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களான முகுல் வாஸ்னிக் மற்றும் வேணுகோபால் ஆகியார் இன்று டெல்லியில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்குள் சென்னை வருகின்றனர். அப்போது கூட்டணி குறித்த முறையான அறிவிப்பு வெளியாகிறது.
தமிழகத்தில் கடந்த 2014 மக்களவை தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணிக்கு 2 இடங்கள் கிடைத்தன.