This Article is From May 18, 2019

மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது: நாளை 7ஆம் கட்ட வாக்குப்பதிவு!

மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், நாளை 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது: நாளை 7ஆம் கட்ட வாக்குப்பதிவு!

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த மாதம் முதல் நடந்த வந்த மக்களவை தேர்தல், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிந்தது.

இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், வேலூர் தொகுதியில் மட்டும் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால், அங்கு தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கும், 38 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஏப்.18ஆம் தேதி நடைபெற்றது.

தொடர்ந்து, மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கும் நாளை (19ஆம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. எனினும், வேலூர் மக்களவைத் தொகுதியில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கடந்த ஏப்.11ஆம் தேதி தொடங்கிய தேர்தலில், 6 கட்டமாக இதுவரை 483 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், மீதமுள்ள 59 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவ நடைபெற உள்ளது.

7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இந்த தேர்தல் நடக்கிறது. பீகாரில் 8, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 உள்ளிட்ட தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 59 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் இறுதிக்கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் சில நாட்களுக்கு முன் பாஜ தலைவர் அமித்ஷா கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, இம்மாநிலத்தில் மட்டும் ஒருநாள் முன்னதாகவே நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையால், அங்கு தேர்தல் நடைபெறும் 9 தொகுதிகளின் வாக்குச்சாவடிகளும் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உட்பட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நாளை நடந்து முடிகிறது. 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள், வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

.