தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை (ஏப்.18ம்) தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும், புதுவையில், தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் வேலூர் மக்களவைத் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்த தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில், நாளை அரசு விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்களும் ஊழியர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் நாளை காலை மற்றும் மதியம் என 2 காட்சிகள் ரத்து செய்யப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.