அரசியல் ஆதாயங்களுக்காக தேஜ் பிரதாப் நாடகம் ஆடுவதாகவும் கூறப்படுகிறது.
Patna: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஏற்கனவே பிரச்னைமேல் பிரச்னையாக இருக்கும் லாலு குடும்பத்தில் மேலும் ஒரு சண்டை வெடித்துள்ளது. அவரது மூத்த மகன் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீங்கி விடுவதாகவும், தம்பியே கட்சியை பார்த்துக் கொள்ளட்டும் என்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாணவர் அணியின் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். நான் அப்பாவி என்று நினைப்பவர்கள்தான் உண்மையிலேயே அப்பாவிகள். எனக்கு ஆதரவு அளிப்பவர்கள் யார் என்று எனக்கு தெரியும்'' என்று கூறியுள்ளார்.
தேஜ் பிரதாப் தனது அதிருப்தியை பலமுறை வெளிப்படுத்தி உள்ளார். பீகாரில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரசும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் கூட்டணி வைத்துள்ளன. ஏப்ரல் 11-ம்தேதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.
அதில் தனது ஆதரவாளர்களின் பெயர் இருக்க வேண்டும் என்று தேஜ் பிரதாப் விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்காக ராஜினாமா நாடகத்தை ஆடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.