Chennai: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வருகிற 4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வருகிற மார்ச் முதல் வாரம் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று கூறப்படுகிறது.
பரபரப்பான சூழ்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மறைந்த ஜெயலலிதா பாணியில் அதிமுக தனித்தே போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:
நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற அதிமுக தொண்டர்கள், தலைமை கழகத்தில் வருகிற பிப்ரவரி மாதம் 4ம் தேதி (திங்கள்) முதல் பிப்ரவரி 10ம் தேதி (ஞாயிறு) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப கட்டண தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.