21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளித்திருக்கிறது.
Chennai: மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக சுமார் 2 வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவுக்கு 4 தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி - தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆகியோர் இடையே கையெழுத்தானது.
அதிமுக கூட்டணியில் முதலில் இடம்பிடித்த பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி. சீட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்பின்னர் இடம்பெற்ற பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது தேமுதிக உடன் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது.
அந்த நேரத்தில், தேமுதிக தரப்பில் 8 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை எம்.பி.யும் தர வேண்டும் என்று டிமாண்ட் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடித்தது. இதற்கிடையே, திமுகவிடமும் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திமுக தரப்பிலும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்துச் சென்றனர். இதனால் எந்தப்பக்கம் தேமுதிக செல்லும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.
இதன் தொடர்ச்சியாக ஒரு கட்டத்தில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றதாக திமுக அறிவிப்பை வெளியிட்டது. இதேபோல, தேமுதிக நிர்வாகிகள் தன்னை சந்தித்தது தொடர்பாக திமுக பொருளாளர் துரை முருகன் பேசியதும், அதற்கு தேமுதிக அளித்த ரியாக்ஷன்களும், இரு கட்சிகள் இடையே பிளவை பெரிது படுத்தின.
இதையடுத்து வேறு வழியில்லாததால், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் அதிமுக - தேமுதிக இடையே நேற்று கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி 4 தொகுதிகளை மட்டுமே தேமுதிகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி - தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆகியோர் இடையே கையெழுத்தானது. 8 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே அதிமுக அளித்திருக்கிறது.