Lok Sabha Elections 2019: மக்களவைக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் மக்கள் காலை 6.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
அனைத்து இடங்களிலும் மக்கள் வாக்களிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. காலை 9 மணி நிலவரப்படி, 13.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.
அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 2 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது. அங்கு வாக்குப்பதிவு செய்ய வந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன்புரமாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சின்னங்கள் மட்டும் ஒட்டப்பட்டுள்ளதாகவும், மற்ற சின்னங்கள் ஒட்டப்படவில்லை என புகார் கூறிய வாக்காளர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் வாக்குச்சாவடியை பூட்டிவிட்டு, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை கண்காணிப்பாளர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் மற்ற கட்சிகளின் சின்னங்களும் ஒட்டப்பட்ட பின்னரே வாக்குச்சாவடியை திறக்க அனுமதித்தனர்.
இதன் பின்னரே வாக்குச்சாவடியில் இயந்திரங்களை பொருத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனால், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்க காலதாமதம் ஆனது.