This Article is From Apr 18, 2019

எதை அழுத்தினாலும் இலை சின்னத்திற்கே வாக்கு! - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு

எந்த பட்டனை அழுத்தினாலும் இலை சின்னத்திற்கே வாக்குகள் விழுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

எதை அழுத்தினாலும் இலை சின்னத்திற்கே வாக்கு! - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு

மக்களவைக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் மக்கள் காலை 6.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இதேபோல், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதலே தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அரியலூர் மாவட்டம் அங்கனூர் வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் வரிசையில் நின்று தனது தாயாருடன் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, எந்தப் பட்டனை அழுத்தினாலும் இலை சின்னத்திற்கே வாக்குகள் விழுவதாக செய்தி வருகிறது. இது உறுதிப் படுத்தப்படாதத் தகவல் என்றாலும் தேர்தல் அதிகாரிகள் இதை கண்காணிக்கவேண்டும்.

பல பகுதிகளில் வாக்குபதிவு இயந்திரங்கள் பழுதாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்றார்.

.