This Article is From Apr 15, 2019

‘’8 வழி சாலைபற்றி கட்கரி பேசியதை ராமதாஸ் எதிர்க்காதது ஏன்?’’ – திருமா கேள்வி!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

‘’8 வழி சாலைபற்றி கட்கரி பேசியதை ராமதாஸ் எதிர்க்காதது ஏன்?’’ – திருமா கேள்வி!!

8 வழிசாலையை நிறைவேற்றுவது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியபோது அதே மேடையில் இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கிடையே மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது 8 வழிச்சாலையை நிறைவேற்றுவது குறித்து பேசினார்.

இதுதொடர்பாக திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், பேரத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்திருக்கிறார்களே தவிர, கொள்கையின் அடிப்படையில் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை. இது பொருந்தாத கூட்டணி.

இதுதான் சேலம் பொதுக் கூட்டத்தில் வெளிப்பட்டிருக்கிறது. 8 வழிச்சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருக்கிறார். அந்த கூட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் பாமக நிறுவனர் ராமதாசும் இருந்திருக்கிறார்.

இதுதான் அவர்கள் எந்த அளவுக்கு நாடகம் ஆடுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு. அவர்கள் நாடக அரசியல் நடத்துகிறார்கள். மக்களை ஏமாற்றி ஆதாய அரசியல் நடத்தப்பார்க்கிறார்கள். இதனை மக்கள் நன்கு உணரத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

.