Lok Sabha Elections 2019: மக்களவைக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் மக்கள் காலை 6.30 மணிக்கே வாக்களிக்க மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாத வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர் வரவர உடனடியாக ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும்.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.