3 தென்மாநிலங்களில் இருந்து ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
New Delhi: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் வழக்கமாக போட்டியிடும் தனது குடும்ப தொகுதியான அமேதியை தவிர்த்து, இரண்டாவது தொகுதியாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இரண்டாவதாக இன்னொரு தொகுதியில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அமேதியில் ராகுல் போட்டியிடும் நிலையில், இரண்டாவது தொகுதியும் தற்போது ராகுலுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமேதியில் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் தூண்டுதலே இந்த முடிவுக்கு காரணமாகும். அமேதியில் தொகுதியை இழக்கப்போவது ராகுல் காந்திக்கு தெரியும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியிருந்தார். அப்போது, பாஜவின் இந்த கருத்து முதிர்ச்சி தன்மையற்றது என காங்கிரஸ் பதிலடி கொடுத்திருந்தது.
இதேபோல், ராகுல் காந்தி கூடுதலாக ஒரு தொகுதியில் தென் மாநிலங்களில் ஒன்றில் போட்டியிட வேண்டும் என கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறும்போது, பிரதமர் மோடி வடக்கிற்கும் தெற்கிற்கும் பிரிவினையை ஏற்படுத்துகிறார் என குற்றம்சாட்டினார்.
மேலும், ராகுல்காந்தியும், காங்கிரசும் தென்பகுதி மக்களின் கலாச்சாரத்தை காக்க போராடி வருகிறது என்றும் வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களின் உறவு பிரிக்க முடியாதது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தி அமேதியிலும், கர்நாடக மாநிலம் பெல்லாரியிலும் போட்டியிட்டார். அதேபோல், ராகுல் தற்போது தென்மாநிலத்தில் போட்டியிடுகிறார்.
மேலும் படிக்க : ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை! ராகுல் திட்டவட்டம்