ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை இருக்கையில் அமரும் படி, மக்களவை சபாநாயகர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
New Delhi: மக்களவையில் தொடர்ந்து பல்வேறு விவகாரம் குறித்து அமளியில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்.பிக்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அவையின் கேள்வி நேரத்தில், மத்திய அரசுக்கு எதிராக அமளியில் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் அமளியில் ஈடுபட தொடங்கினர்.
விவசாயிகள் விவகாரம் குறித்து விவாதிப்பதால், அனைவரும் அமைதி காக்கும்படி, சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை கோரிக்கை விடுத்தார். எனினும், சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கி வரப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து அமளி நீடித்ததால் சபாநாயகர் ஓம் பிர்லா, உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது இருக்கைக்கு திரும்பினால், கேள்வி கேட்க வாய்ப்பு தருவதாகவும் சபாநாயகர் கூறினார். எனினும், காங்கிரஸ் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.