அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக சேர்ந்துள்ளன. தேமுதிகவும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு மங்களகரமான கூட்டணி அமைந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக அணியில் பாமகவும், பாஜகவும் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் பாமகவுக்கு 7-ம், பாஜகவுக்கு 5-ம் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில் கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது-
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் சின்னங்களையும், திமுக கூட்டணி கட்சிகளின் சின்னங்களையும் ஒப்பிட்டு பாருங்கள். அதிமுக கூட்டணியில் இலை (அதிமுக), பூ (பாஜக), பழம் (பாமக), மத்தளம் (முரசு – தேமுதிக சின்னம்) சேர்ந்து ஒரு மங்களகரமான கூட்டணி அமைந்துள்ளது.
திமுக கூட்டணியை எடுத்துக் கொள்ளுங்கள். கொதிக்கும் சூரியன் (திமுக), கூர்மையான பம்பரம் (மதிமுக), துண்டிக்கப்பட்ட கை (காங்கிரஸ்), சுத்தி அரிவாள் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) இந்த சின்னங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்தால் கலவரம்தான்.
இப்படியொரு மெகா கூட்டணி அமையும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. அதிமுகவுக்கு கூட்டணிக்கு மக்கள் மகுடம் சூட்டுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.