திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே ஏற்பட்ட வன்முறையால் மேற்கு வங்கத்தில் பதற்றம் நீடிக்கிறது.
New Delhi: Lok Sabha Election 2019: மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்களிடையே ஏற்பட்டிருக்கும் வன்முறையால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. இதையடுத்து தேர்தல் பிரசாரத்தை நாளை இரவு 10 மணியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில் 7-வது கட்டமாக வரும் 19-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 56 தொகுதிகள் இடம்பெறுகின்றன.
இதையொட்டி, மேற்கு வங்கத்தில் பாஜக, திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்கவிருந்த பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பை ஏற்பட்டது. இதையடுத்து நேற்று வன்முறையும், கலவரமும் வெடித்தது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருப்பதால் அதனை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 19-ம் நூற்றாண்மை சேர்ந்த சீர்திருத்தவாதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவும், திரிணாமூல் காங்கிரசும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், 'ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கல்வியாளர், எழுத்தாளர் போன்ற பன்முகத்தன்மையும், பல சாதனைகளை படைத்தவரைகவும் வித்யாசாகர் இருந்தார். அதுமட்டுமின்றி விதவைகள் மறுமணம் பரவலாக நடைபெற காரணமாக இருந்ததுடன் பல்வேறு சமூக சீர்திருத்தங்களையும் அவர் மேற்கொண்டார்' என்று குறிப்பிட்டுள்ளது.
சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் வெள்ளியன்று மாலை 5 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில், அதனை நாளை இரவு 10 மணியுடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்கிற அதிரடி உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கிறது.