This Article is From Mar 15, 2019

''கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்வது பற்றி பாஜகவிடம் பாடம் கற்க வேண்டும்'' - அகிலேஷ்

மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் கூட்டணி வைக்கவில்லை.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் என்.டி.டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

Lucknow:

கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்வது குறித்து பாஜகவிடம் பாடம் கற்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கூட்டணி வைக்காத நிலையில், அகிலேஷின் கருத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சிப்பது போல் உள்ளது. 

என்.டி.டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது-

கூட்டணி கட்சிகளுடன் பிரச்னை இருந்தாலும், அவர்களுடன் பாஜக நல்ல முறையில் அனுசரித்து செல்கிறது. இந்த விவகாரத்தில் பாஜகவிடம் பாடம் பெற வேண்டும். ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும். 

மிகவும் குறைந்த சீட்டுகளை அளித்தாலும் கூட்டணியை பாஜக ஏற்றுக் கொள்கிறது. இதனால் அக்கட்சிக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் வருகின்றன. இருப்பினும் கூட்டணி என்று வந்து விட்டால் பாஜக அனுசரித்து செல்கிறது. 

காங்கிரஸ் ஒரு மிகப்பெரிய கட்சி. அந்த கட்சி மற்ற அரசியல் கட்சிகளுக்கு உதவி செய்ய வேண்டும். உதாரணத்திற்கு மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜிக்கு உதவ வேண்டும். டெல்லியில் பாஜகவுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அங்கு கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க  வேண்டும். 

இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார். உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இங்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கியதால் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லை. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும், சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி கட்சி தரப்பில் வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

.