அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஹைலைட்ஸ்
- ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். உடன் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்துகிறார்
- மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைகிறது
- கூட்டணியில் சேரும் மற்ற கட்சிகள் குறித்தும் அமித் ஷா பேசலாம்
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி அமையவுள்ளது. இன்று சென்னை வரும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன்பின்னர் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டுகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவது உறுதியாகி விட்டது. அதனை தவிர்த்து விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் அதிமுக பாஜக பக்கம் சாயலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக அமைச்சர்கள் சிலர் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சில நாட்களுக்கு முன்பாக பேட்டியளித்த பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைத்து விட்டோம் என்று கூறியிருந்தார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் சென்னை வந்து அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சூழலில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். அவர் இன்று அதிமுக நிர்வாகிகளை சந்தித்து கூட்டணியை இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் அமித் ஷா, அதன் பின்னர் அதிமுக தலைமை நிர்வாகிகளான முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசவுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், மேலும் எந்த கட்சிகளை சேர்த்துக் கொள்வது என்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது பேசப்பட வாய்ப்பிருக்கிறது.
இன்னும் சில நாட்களில் தொகுதிப் பங்கீடு, கூட்டணி கட்சிகளின் விவரங்கள் குறித்து இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - "சிவசேனா - பாஜக கூட்டணி உறுதியானது! - தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு"