அதிமுக கூட்டணி ஒரு துரோக கூட்டணி என்று தினகரன் விமர்சித்துள்ளார்.
தேர்தல் கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி வரவிருக்கும் மக்கவை தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெல்லும் என்று அதன் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டிடிவி தினகரன் கூறியதாவது-
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் வகையில் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. அது ஒரு துரோக கூட்டணி. திருவாரூர் இடைத் தேர்தலில் போட்டியிட திமுக அச்சம் அடைந்தது.
ஜெயலலிதா யாரையெல்லாம் வேண்டாம் என்று தவிர்த்தாரோ அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. அவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். இதற்கு அவர்கள் தகுந்த பாடம் கற்றுத் தருவார்கள்.
திருவாரூர் சட்டசபை இடைத் தேர்தலை சந்திக்க பயந்தவர்கள்தான் திமுகவினர். அவர்களும் இந்த தேர்தலில் தோல்வியடைவார்கள். மக்களவை மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வீழ்த்தும்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.