This Article is From Mar 04, 2019

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது திமுக

இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் முத்தரசன் தலைமையிலும், திமுக தரப்பில் துரை முருகன் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியது திமுக

21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  கூறியுள்ளது. 

திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு செய்வது முழு வீச்சில் நடந்து வருகிறது. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு இடமும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திமுக இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் இன்று சுமுக உடன்பாடு ஏற்பட்டது. 

இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் முத்தரசன் தலைமையிலும், திமுக வின் தொகுதிப் பங்கீட்டுக்குழு துரைமுருகன் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் உடன்பாடு ஏற்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
இதுகுறித்து பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என்று கூறியுள்ளார். 

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மார்க்சிஸ்ட் தரப்பில் 3 தொகுதிகள் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக  தரப்பில் 2 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என்று உறுதியுடன் இருப்பதாக தெரிகிறது. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. நாளைக்குள் இந்த விவகாரம் முடிவுக்கு வந்து விடும் என்று தெரிகிறது. 
 

.