This Article is From Jul 04, 2019

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

நாட்டிலேயே வேலூர் தொகுதியில் மட்டும்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

தமிழகத்தில் காலியாக இருக்கும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப் பதிவு 5 ஆம் தேதி நடைபெறும். ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும்.

ஜூலை 11 ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். ஜூலை 18 ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.  ஜூலை 19 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பிரிசீலனை நடக்கும். ஜூலை 22 ஆம் தேதியே, வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்தது. அதே நேரத்தில், வேலூரில் இருக்கும் திமுக கட்சிப் பிரமுகர் என்று சொல்லப்படுபவருக்குச் சொந்தமான இடத்தில் இருந்து கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, அத்தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. நாட்டிலேயே வேலூர் தொகுதியில் மட்டும்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.