இரட்டை இலை சின்னத்தில் தமாகா வேட்பாளர் போட்டியிடலாம் என தெரிகிறது.
ஹைலைட்ஸ்
- இரட்டை இலை சின்னத்தில் தமாகா போட்டியிடும் என தெரிகிறது
- ஒரு தொகுதியை தமாகாவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது
- 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக
மக்களவை தேர்தலையொட்டி ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு ஒரு தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது. தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் ஜி.கே. வாசனும் - அதிமுக தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் நேற்று வரைக்கும் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி வைத்திருந்தது.
கடைசியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் நேற்றே ஓரளவுக்கு உடன்பாடு ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நாளைக்குள் முடிவு ஏற்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று அதிமுக - தமாகா இடையே இன்று தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்தது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் ஜி.கே. வாசனும் - அதிமுக தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதாகவே தெரிகிறது. இதன் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.