This Article is From Mar 23, 2019

''இந்தியாவுக்கு ஒரு வில்லன்... அவருக்கு தமிழ்நாட்ல ரெண்டு எடுபிடி!!'' : உதயநிதி பிரசாரம்

சேலத்தில் கள்ளக் குறிச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

''இந்தியாவுக்கு ஒரு வில்லன்... அவருக்கு தமிழ்நாட்ல ரெண்டு எடுபிடி!!'' : உதயநிதி பிரசாரம்

மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தியாவுக்கு ஒரு வில்லன்.. அவருக்கு 2 எடுபிடி என்று பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

திமுகவின் நாளிதழான முரசொலியின் நிர்வாக இயக்குனராக உதயநிதி செயல்பட்டு வருகிறார். மக்களவை தேர்தலையொட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். 

தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து பேசிய உதயநிதி, அழகான வேட்பாளரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தவறி விடாதீர்கள். அழகு என்பது அவரது தமிழ், திமுக மீது கொண்ட பற்றை குறிப்பிட்டேன் என்று கூறினார். அவரது பேச்சு 2 நாட்களாக வலைதளங்களில் வட்டமடித்தது. 

இந்த நிலையில் சேலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட உதயநிதி, கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் கவுதம சிகாமணியை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். வாழப்பாடியில் அவர் பேசியதாவது-

திமுக வின் தேர்தல் அறிக்கைதான் இந்த மக்களவை தேர்தலின் ஹீரோ. அதனைப் பார்த்து அதிமுக கூட்டணியினர் பயத்தில் உள்ளனர். ஹீரோ இருக்கிறார் என்றால் வில்லன் என்று ஒருவர் இருப்பார். 

இந்தியாவின் வில்லன் பிரதமர் நரேந்திர மோடி. ஒரு வில்லன் இருக்கும்போது அவருக்கு 2 எடுபிடிகள் இருப்பார்கள். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும்தான் அந்த 2 எடுபிடிகள். 

இவ்வாறு உதயநிதி பேசினார். கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளராக தேமுதிக துணை பொதுச் செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே. சுதீஷ் நிறுத்தப்பட்டுள்ளார். 
 

.