உத்தர பிரதேசத்தில் மாயாவதி அகிலேஷ் யாதவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
Lucknow: காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணி இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இன்று காலை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மாயாவதி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இதன் முடிவில் இத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.
நாட்டின் பிரதமரை நிர்ணயிக்கும் முக்கிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் எதிரிக் கட்சிகளாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் இந்த மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன.
காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக உத்தர பிரதேசத்தில் அக்கட்சியை அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சேர்த்துக் கொள்ளவில்லை. இருப்பினும் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும், சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இந்த நிலையில் உத்தர பிரதேசம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனையை மாயாவதி நடத்தினார். இந்த முடிவில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் காங்கிரஸ் கட்சியுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காததால் மாயாவதி அதிருப்தியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.