ராகுல் காந்தியின் கைகளில்தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
Chennai: நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல் காந்திதான் வருவார்; அவரது கையில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது. இதில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்தார்.
இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோ, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பேசினர். இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது-
இன்னும் சில வாரங்களில் ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக ஆகி விடுவார். அவரது கைகளில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்.
வெகு விரைவில் ராகுல் காந்தியிடம் அதிகாரம் வரப்போகிறது. அது ஏழைகளுக்கான அதிகாரமாக இருக்கும். சாதாரண மக்களுக்கான அதிகாரமாக அது இருக்கும்.
இவ்வாறு ஸ்டாலின்பேசினார். கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக தமிழகத்தில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றியது. மற்ற 2 தொகுதிகளில் பாஜகவுக்கு ஒன்றும், பாமகவுக்கு ஒன்றும் கிடைத்தன. திமுக - காங்கிரஸ் கூட்டணி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் காங்கிரஸ் 9 தொகுதியில் போட்டியிடுகிறது. புதுவை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.