Akhilesh Yadav Mayawati Press Conference: ஏற்கனவே இரு தலைவர்களும் டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர்.
Lucknow: உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க கட்சிகளாக விளங்கும் சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் செய்தியாளர்களை நாளை கூட்டாக சந்திக்கின்றனர். அப்போது மக்களவை கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தேர்தலுக்கு பின்னர் காங்கிரசை ஆதரித்தன.
ஆனால் இரு கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் பொறுப்பு ஏதும் வழங்கப்படாததால் அக்கட்சியின் தலைமை அதிருப்தியில் இருந்தது. இதனை ட்விட் செய்து அகிலேஷ் யாதவ் தனது அதிருப்தியை வெளிப்படையாகவே கூறினார்.
அதேநேரம் நாட்டை ஆளும் கூட்டணியை தீர்மானிக்கும் முக்கிய தேர்தல் களமாக உத்தரப்பிரதேசத்தின் மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு இருக்கும் 80 தொகுதிகளில் பெரும்பான்மை பெறும் கட்சிக்கு மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக அமையும். இந்த நிலையில், இங்கு எதிரிக் கட்சிகளாக இருக்கும் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜூம் கூட்டணி அமைக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக இரு கட்சி தலைவர்களும் கடந்த வாரம் டெல்லியில் சந்திப்பு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இருவரும் நாளை செய்தியாளர்களை கூட்டாக சந்திப்பார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த இரு கட்சிகளும் உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி வைத்து, காங்கிரசை ஓரம் கட்டினால் அது காங்கிரசுக்கு இழப்பாக அமையும் என அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.