மக்களவை தேர்தலில் அதிமுக – பாமக – தேமுதிக – பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- அமித் ஷா தனது பயணத்தை திடீர் ரத்து செய்திருக்கிறார்
- தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்கிறது பாஜக
- அதிமுக - பாமக - தேமுதிக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனால் அதிமுக உடனான கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக உடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை சந்தித்து கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமித் ஷாவின் பயணம் ரத்தான நிலையில், அதிமுக நிர்வாகிகள் பாமக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அங்கு அதிமுக – பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
எல்லாம் சுமுகமாக அமைந்து விட்டால் இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக – பாமக – தேமுதிக – பாஜக கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.