மக்களவை தேர்தல் தேதி குறித்த விவரங்களை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாதுகாப்பு, முழுக்க முழுக்க நேர்மையாக நடத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த மக்களவை தேர்தல் 6 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்காக தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் இத்தகைய தகவல் வெளியாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர், நக்சல் பாதிக்கப்பட்ட சுமார் 10 மாநிலங்கள் உள்ளிட்ட இடங்களில் தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக இருக்கும்.
முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அதன்பின்னர் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மக்களவை தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும், கணிப்பதற்கு மிக கடினமான தேர்தலாகவும் உள்ளது.
இந்த தேர்தலில் மாநில கட்சிகள் செல்வாக்கு மிக்கவையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமாஜ்வதி, பகுஜன் சமாஜ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தேசிய கட்சிகளை விட்டு தள்ளியே நிற்கின்றன.
இதனால் எந்தக் கூட்டணி வெற்றி பெறும், ஆட்சியை எந்தக் கட்சி அமைக்கும் என்பது கணிக்க முடியாமல் உள்ளது.