தொகுதி பேர பிரச்னைக்கு பாஜக தலைவர் அமித் ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
New Delhi: மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியும் தலா 17 இடங்களில் போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இரு கட்சிகளுடன் லோக் ஜனசக்தி கட்சிக்கு 4 இடங்களும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான், ராஷ்டிரிய லோக் சமதா கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா ஆகியோரிடம் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி கடந்த தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றது.
உடல் நல பிரச்னை காரணமாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பதிலாக மகன் சிராக் பாஸ்வான் ஹாஜிப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினராக ராம்விலாஸ் பாஸ்வான் தேர்வு செய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014 பொதுத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக, லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா ஆகியவை கூட்டணி அமைத்தன. இதில் பாஜக 30 இடங்களில் போட்டியிட்டு 22 இடங்களை கைப்பற்றியது. லோக் ஜனசக்தி கட்சி 7 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 3 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.